ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருமணிமுத்தாற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம்சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமணிமுத்தாற்றில் இறங்கி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-11 20:32 GMT

சேலம்

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமணிமுத்தாற்றில் இறங்கி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் போராட்டம்

சேலம் மாநகராட்சியில் 700-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பிற மாநகராட்சியில் வழங்குவது போல் தினக்கூலி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வார விடுமுறை, ஆயுள் காப்பீடு, விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் விருப்பத்துக்கு மாறாக அதிகாரிகள் தன்னிச்சையாக செய்த பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சிறிய துளை வழியாக உள்ளே நுழைந்து கயிறு மூலம் திருமணிமுத்தாற்றுக்குள் இறங்கினர். பின்னர் முட்டளவுக்கு செல்லும் தண்ணீரில் நின்று கொண்டு திடீரென ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் டவுன் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரிடம், கலெக்டர் அல்லது மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் வந்து எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக உறுதியளிக்க வேண்டும் என்றனர். இதனால் அவர்களது போராட்டம் மதியத்துக்கு பிறகும் தொடர்ந்து நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் குணாளன் கூறும் போது, சேலம் மாநகராட்சியில் தற்போது தூய்மை பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. தூய்மை பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் எங்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பதில் பல்வேறு குளறுபடி நடக்கிறது. மாதந்தோறும் பிடித்தம் போக ரூ.11 ஆயிரத்து 600 வரை கிடைக்கும். ஆனால் தற்போது ரூ.9 ஆயிரத்து 700 மட்டுமே கொடுக்கின்றனர். எங்களுக்கு குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.700 கொடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்