தொடக்க கூட்டுறவு வங்கிஅனைத்து பணியாளர் சங்கத்தினர் தொடர் விடுப்பு போராட்டம்
கிருஷ்ணகிரியில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் மாவட்ட செயலாளர் செந்தில், பொருளாளர் ராஜதுரை உள்பட 60-க்கும் மேற்பட்டோர் தொடர்விடுப்பு கோரி மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் அல்லது விவசாய உள் கட்டமைப்பு நிதி திட்டத்தை அனைத்து சங்கங்களும் அமல்படுத்த வேண்டும் என செயலாட்சியர் மற்றும் களமேலாளர் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி, 40 கிராம் நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் சொந்த நிதி அரசிடமிருந்து முழுமையாக வரவில்லை. இதனால் லாபத்தில் இயங்கும் சங்கங்கள் கூட நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. விவசாய உபகரணங்கள் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வலியுறுத்துகின்றனர். எனவே மாவட்டத்தில் உள்ள 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 105 சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் தொடர் விடுப்புகோரி மண்டல இணைப்பதிவாளரிடம் மனு அளித்து தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.