தாசில்தார் பணியிடை நீக்கம்:வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

Update: 2023-08-30 19:30 GMT

தர்மபுரி:

தாசில்தாரின் பணியிடை நீக்க உத்தரவை வாபஸ் பெற கோரி தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணியிடை நீக்க உத்தரவை வாபஸ் பெற கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அன்பு, அசோக்குமார், பிரபாவதி, நாகவேணி, சிவக்குமார், ராஜ்குமார், சேதுலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பழனியம்மாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

பணிகள் பாதிப்பு

இதேபோல் நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பென்னாகரம் ஆகிய தாலுகா பகுதிகளிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டம் காரணமாக வருவாய்த்துறை அலுவலகங்களில் சான்றிதழ்களில் கையொப்பமிடுதல், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுதல் உள்ளிட்ட பணிகள் நேற்று பாதிக்கப்பட்டன. இதேபோல் சில அலுவலகங்கள் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

பாலக்கோடு

இதேபோல் பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாசில்தார் ராஜா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் பிறப்பித்த ஆணையை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்