பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அருகே பிலிக்கல் மேடு பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று 6-வது நாளாக கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து தலைமை தாங்கினார். பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நாம் தங்கவேல் முன்னிலை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி என்கிற நல்லாக்கவுண்டர், வக்கீல் ஈசன் முருகசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில் தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும், உழவர்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை தங்கு தடை இன்றி வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தேங்காய் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.