அவசர சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் பிரசவம், அவசர சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.

Update: 2023-01-04 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் பிரசவம், அவசர சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.

கூட்டம்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் வந்தனா கார்க், மாவட்ட திட்டக்குழு பேராசிரியர் சீனிவாசன், உறுப்பினர் அமலோர் பாவந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் (தரம்) மீனாட்சி சுந்தரி, இணை இயக்குனர் சதீஷ்ராகவன் ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர்.

இதில், மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான தேவைகள் உள்ளன. இதனால், தமிழக அரசு மக்களை தேடி அனைத்து வசதிகளும் சென்றடைய வேண்டும் என்கிற உயரிய நோக்கில் கெலமங்கலம், தளி, மத்தூர், காவேரிப்பட்டணம், சூளகிரி, மேகலசின்னம்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி மற்றும் ஓசூர் ஆகிய 10 வட்டாரங்களில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் கிராம சுகாதார பேரவை தொடங்கப்பட்டு உள்ளது.

தீர்மானங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருந்திருந்தாலும் இன்னும் சில மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக கெலமங்கலம் போன்ற மலை கிராமங்களில் பிரசவம் மற்றும் அவசர சிகிச்சைக்கு போதிய கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது. இதுபோன்ற சுகாதார சேவைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய துறை அலுவலர்கள் மட்டுமே முடிவு எடுத்து வந்தனர்.

இந்த சுகாதார பேரவையின் மூலம் தங்களது பகுதிக்கு தேவையான சுகாதார வசதிகள் என்ன தேவை என்பதை மக்களால் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டு நிறைவேற்றப்படும். இதனை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். மலை கிராமங்களில் பிரசவம், அவசர சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்கீதா, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெயந்தி, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், துணை இயக்குனர்கள் எழிலரசி, புவனேஸ்வரி, சுகந்தா, உதவி திட்ட மேலாளர் மறைத்தென்றல், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயலட்சுமி பெருமாள் (மத்தூர்), சீனிவாசலு (தளி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி

தொடர்ந்து, கலெக்டர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மக்களை தேடி மருத்துவம், டெங்கு மற்றும் மலேரியா எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, தொழுநோய், எய்ட்ஸ் கட்டுப்பாடு, காசநோய், 181 மகளிர் ஹெல்ப்லைன், வளர் இளம் பருவத்தினருக்கான சுகாதார ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்