அமைச்சரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு: சட்டசபையில் தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்கள் காரசார மோதல்

அமைச்சரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சட்டசபையில் தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார மோதல் ஏற்பட்டது.

Update: 2023-04-11 23:59 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து அ.தி.மு.க. உறுப்பினர் ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்) பேசியதாவது:-

வேட்டி - சேலை வழங்கியதில் தாமதம்

இந்த ஆண்டு பொங்கலுக்காக வழங்கப்படும் இலவச வேட்டி - சேலை, வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் முன்கூட்டியே நெசவாளர்களுக்கு நூல் வழங்கப்பட்டு, தை மாதத்திற்கு முன்பே வேட்டி, சேலைகள் தயாரிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது இன்று வரை பல இடங்களில் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குறுக்கிட்டார்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு

அமைச்சர் ஆர்.காந்தி:- இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் நிறைய பேட்டி கொடுத்துள்ளார். நானும் அதற்கு பதில் கொடுத்துள்ளேன். தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக தரமான வேட்டி, சேலை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொடுக்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி - சேலை குறித்து அ.தி.மு.க. தவிர வேறு யார் கேள்வி கேட்டிருந்தாலும் சரியாக இருந்திருக்கும்.

(அமைச்சரின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அப்பாவு அவர்களை அமைதிப்படுத்தினார்.)

அவை முன்னவர் துரைமுருகன்:- அ.தி.மு.க. உறுப்பினர் பேசும்போது ஒரு குற்றச்சட்டை கூறினார். உங்கள் ஆட்சியில் நடந்ததை அமைச்சர் சொல்லும்போது அவரை பேச விடுங்கள்.

மக்கள் குற்றச்சாட்டு

அமைச்சர் காந்தி:- இப்போது வழங்கப்பட்ட வேட்டி, சேலையின் தரத்தை சொல்லுங்கள். உண்மையான மனசாட்சியோடு, இதைப்பற்றி பேச வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- இலவச வேட்டி, சேலை தை மாதத்திற்குள் கொடுக்கவில்லை என்று எங்கள் கட்சி உறுப்பினர் சொல்கிறார். எம்.எல்.ஏக்கள் தொகுதி பக்கம் போகும்போது மக்கள் குற்றச்சாட்டாக சொல்கிறார்கள். அதை இங்கே பேசுகிறோம். அதைப்பற்றி பேசாமல், 2012-ம் ஆண்டில் எப்போது கொடுத்தோம் என்று அமைச்சர் சொல்கிறார். நாங்களும் அப்போது நடந்ததை பேசுவோம்.

அவை முன்னவர் துரைமுருகன்:- 2012-ம் ஆண்டு நடந்ததை அமைச்சர் காந்தி பேசியதால், நீங்களும் பேசுங்கள்.

தவறான எண்ணத்தில் சொல்லவில்லை

அமைச்சர் எ.வ.வேலு:- இன்னும் இலவச வேட்டி, சேலை வந்து சேரவில்லை என்று அ.தி.மு.க. உறுப்பினர் பேசும்போது குற்றம் சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று துறை அமைச்சர் கூறினார். மற்றபடி தவறாக எந்த எண்ணத்திலும் அவர் சொல்லவில்லை.

எடப்பாடி பழனிசாமி:- சட்டசபைக்கு மக்கள் பிரச்சினை பற்றித்தான் பேச வந்திருக்கிறோம். அ.தி.மு.க. கேள்வி கேட்கக் கூடாது என்கிறார். அப்போது நாங்கள் எல்லாம் வெட்டியாகவா வந்திருக்கிறோம். அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. மக்கள் குறைகளை இங்கே பேச அனுமதிக்க வேண்டும்.

காரசார மோதல்

(அப்போது எதிர் வரிசையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), கிரி (செங்கம்) ஆகியோர் எழுந்து ஏதோ பேச முயன்றனர். ஆனால் அவர்களுக்கு மைக் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து குரல் எழுப்பினர். இதற்கு பதிலடியாக பின்வரிசையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்களும் பதில் கூறினார்கள்.

இதனால், அவையில் கடும் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. தி.மு.க. உறுப்பினர்களை முன்வரிசையில் இருந்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் உட்காரும்படி கேட்டுக்கொண்டனர். இந்த நேரத்தில், தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே காரசார மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அவை பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் அமைதிபடுத்தியதால் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது)

இவ்வாறு விவாதம் நடந்து முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்