உலா வந்த காட்டு யானை

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2023-04-26 18:45 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

பலா சீசன்

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டு உள்ளனர். வழக்கமாக இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது வழக்கம்.

இந்த சுவை மிகுந்த பலா பழங்களை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். இந்தநிலையில் தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலா சீசன் தொடங்கி உள்ளது. மரங்களில் கொத்துக் கொத்தாக பலா பிஞ்சுகள் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வந்து தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளன.

காட்டு யானை

அவை அவ்வப்போது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முள்ளூர் பகுதியில் ஆண் காட்டு யானை உலா வந்தது. அங்கு பூட்டப்பட்டு இருந்த தேநீர் கடைக்கு முன்புறம் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டியில் உணவு ஏதாவது கிடைக்குமா என தேடியவாறு நின்று கொண்டிருந்தது.

யானையை கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தினர். சற்று நேரம் அங்கு நின்று கொண்டிருந்த யானை அருகே இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பலாப்பழ சீசன் காரணமாக மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்