சிறப்புலி நாயனார் வீதி உலா

செம்பனார்கோவில் அருகே சிறப்புலி நாயனார் வீதி உலா நடந்தது

Update: 2022-11-28 18:45 GMT

பொறையாறு,

செம்பனார்கோவில் அருகே ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் ஆக்கூரில் வசித்து வந்தார். சிறந்த சிவ பக்தரான இவர், தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தார். இதனால் இவரது பக்தியை உணர்ந்த இறைவன் சிறப்புலி நாயனாருக்கு காட்சி அளித்தார் என்பது வரலாறு. இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் சிறப்புலி நாயனார் வீதி உலாவாக கொண்டு வரப்பட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நேற்று சிறப்புலி நாயனார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து வாள் நெடுங்கண்ணி அம்மன் மற்றும் தான்தோன்றீஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்புரான் சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்