பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா

மார்கழி மாத பிறப்பையொட்டி ஜீவராசிகளுக்கு படியளக்கும் வகையில் காரைக்குடியில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-12-16 18:45 GMT

காரைக்குடி, 

மார்கழி மாத பிறப்பையொட்டி ஜீவராசிகளுக்கு படியளக்கும் வகையில் காரைக்குடியில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

மார்கழி மாதம் பிறப்பு

மார்கழி மாதம் பிறந்தாலே வீடுகளில் பெண்கள் அதிகாலை நேரத்தில் எழுந்து அரிசியால் கோலமிடுவது வழக்கம். எறும்புகள் உள்ளிட்ட சிறு ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. மேலும் மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

நேற்று மார்கழி மாதம் பிறப்பையொட்டி ஏராளமான வீடுகளில் அதிகாலையில் பெண்கள் வண்ண கோலமிட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பாடப்பெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பஞ்சமூர்த்தி வீதி உலா

மடப்புரம், தாயமங்கலம், கொல்லங்குடி, பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காரைக்குடி நகர சிவன் கோவிலில் நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டியும், அஷ்டமி தினத்தையொட்டி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மீனாட்சிசுந்தரேசுவரர், மீனாட்சி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து செஞ்சை, மேலமடம், கொப்புடையம்மன் கோவில் உள்ளிட்ட பகுதியில் வீதி உலா வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்கு படியளந்த அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜை

காரைக்குடி டி.டி.நகர் கற்பகவிநாயகர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் வெள்ளி அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செட்டிகுறிச்சி செல்வ விநாயகர் கோவில், புழுதிபட்டி சத்திரம் பால தண்டாயுதபாணி கோவில், புழுதிபட்டி வில்லி விநாயகர், கரிசல்பட்டி கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவில், இரணிபட்டியில் உள்ள பழனி தண்டாயுதபாணி கோவில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோவில், ஞானியார் மடம் தண்டாயுதபாணி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்