20 மாநகராட்சிகளில் 18-ந் தேதி வேலை நிறுத்தம்

அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி 20 மாநகராட்சிகளில் வருகிற 18-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-11-06 18:45 GMT


அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி 20 மாநகராட்சிகளில் வருகிற 18-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் அவசர மாநில செயற்குழு கூட்டம் கோவை ரெயில்நிலையம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சீத்தாராமன், கோவை மண்டல செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகராட்சி கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் வரவேற்றார்.

தமிழகத்தில் சென்னை தவிர 20 மாநகராட்சிகளில் உள்ள 20 வகை பணியிடங்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை 3,417 பணியிடங்களாக குறைத்து தமிழக அரசு அரசாணை 152-ஐ பிறப்பித்தது. 20 வகை பணியிடங்களில் உள்ள மாநகராட்சி பணியாளர்கள் பணியில் இருக்கும் வரை பணியாற்றிடவும், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த பணியிடத்தை அவுட்சோர்சிங் (வெளி முகமை) முறையில் நிரப்பிடவும் அரசாணை பிறக்கப்பட்டு உள்ளது குறித்து 20 மாநகராட்சி கூட்டமைப்பின் தலைவர்களும் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

20 பணியிடங்கள் நீக்கம்

தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாக துறை அரசாணை எண் 152-ஐ பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையில் 20 பணியிடத்தில் உள்ள மாநகராட்சி பணியாளர்கள் பணியில் இருக்கும் வரை பணியாற்றிடவும், அவர்கள் ஓய்வு பெற்ற பின் பணியிடத்தினை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பிட அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் வரி வசூலர், டிரைவர், பதிவறை எழுத்தர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், தலைமை அலுவலக உதவியாளர், மருத்துவ அலுவலர், நர்சுகள், மருந்தாளுனர், பகுதி சுகாதார செவிலியர், கன்சர்வன்சி இன்ஸ்பெக்டர், நகர சுகாதார செவிலியர், செயல்திறன் பணியாளர் (நிலை 1 மற்றும் 2), செயல் திறன் அற்ற பணியாளர், அலுவலக உதவியாளர், காவலாளி, துப்புரவு பணி மேற்பார்வையாளர், மருத்துவ ஆண், பெண் உதவியாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட 20 பணியிடங்கள் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

18-ந் தேதி வேலை நிறுத்தம்

எனவே வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் அனைத்து மாநகராட்சி முப்பு வாயிற்கூட்டம் நடத்தி முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பெருந்திரளாக சென்று அந்தந்த மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் மனு அளிப்பது, 11-ந் தேதி சென்னை கோட்டையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோரை சந்தித்து அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி மனு அளிப்பது, அமைச்சருடனான சந்திப்பில் பயன் ஏதும் இல்லையெனில் வருகிற 18-ந் தேதி 20 மாநகராட்சிகளில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 20-ந் தேதி திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்