அனுமதியின்றி பள்ளிகளில் விடுதி நடத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை
அனுமதியின்றி பள்ளிகளில் விடுதி நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதியின்றி பள்ளிகளில் விடுதி நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தங்குமிடத்துடன் கூடிய அரசு, தனியார் பள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளியின் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட சமூக நல அலுவலர்கள் மூலம் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மாணவர்கள் தங்கும் அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள், உண்டு உறைவிட பள்ளி விடுதிகள் 41, அரசு நிதியுதவி பெறும் பள்ளி விடுதிகள் 18, தனியார் பள்ளி விடுதிகள் 12 என மொத்தம் 71 பள்ளி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
ஆபத்தான கட்டிடங்கள் அல்லது கட்டிடப்பகுதிகள் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சட்டப்படி கடும் நடவடிக்கை
அதுமட்டுமின்றி 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மனநல பாதிப்பு, மனசோர்வு, படிப்பில் ஆர்வமின்மை ஆகியவைகளை கண்டறிந்து அவ்வாறு இருப்பின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உளவியலாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் மனச்சோர்வை போக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும் மாற்றங்களை கண்டறிந்தால் அவற்றை புறக்கணிக்காமல் அவர்களுடன் கலந்துரையாடல் வேண்டும்.
தேர்வுகளில் தோல்வி அடைந்த குழந்தைகளை எக்காரணத்தை கொண்டு அடிக்கவோ, திட்டவோ, துன்புறத்தவோ கூடாது.
அவ்வகையான பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக கையாண்டு குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்திடல் வேண்டும். இது சம்மந்தமாக ஏதேனும் பிரச்சினைகள், ஆலோசனைகள் தேவைப்படுமாயின் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 104 என்ற இலவச தொலைபேசியை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
சில தனியார் பள்ளிகளில் அனுமதியில்லாமல் விடுதிகள் நடத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.
அனுமதியில்லாமல் விடுதிகள் நடத்துவது சட்டப்படி குற்றம். பள்ளி விடுதிக்கு முறையாக விண்ணப்பித்து அரசு அனுமதி பெற்ற பின்னரே மாணவர்களை சேர்த்து விடுதியை செயல்படுத்த வேண்டும். அனுமதியின்றி பள்ளிகளில் விடுதி நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சைல்டு லைன் உதவி எண்
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பேசுகையில், கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் ஏற்பட்ட பிரச்சினை அனைவருக்கும் தெரியும். மாணவர்கள் பெற்றோர்களை விட ஆசிரியர்கள் தான் அதிக நேரம் கூட இருக்கும் சூழ்நிலை உள்ளது.
ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பது மட்டும் வேலையில்லை. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏதேனும் பிரச்சினை உள்ளதா, பள்ளியில் சக மாணவர்களுடன் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர்,
அவர்களது மன நிலை எப்படி உள்ளது போன்றவற்றையும் ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். சைல்டு லைன் இலவச உதவி எண் குறித்து பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெண் குழந்தைகள் தங்கி இருக்கும் இடத்தை தவிர பள்ளி மற்றும் விடுதிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளி மற்றும் விடுதிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும்.
ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த சம்பவம் குறித்து 12 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு விவரத்துடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு கவுன்சிலிங்
சமீபத்தில் ஒரு அரசு பள்ளியில் இருதரப்பை சோ்ந்த மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். பள்ளிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பது கண்டறிந்தால் ஆசிரியர்கள் முன்கூட்டியே போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
குட்கா பொருட்களை மாணவர்கள் யாரேனும் பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்களை உடனடியாக கண்டித்து, கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட பள்ளியை சுற்றியுள்ள பகுதியில் சோதனை நடத்தி அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமரன், மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை மற்றும் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.