'அரிக்கொம்பன்' யானை குறித்து தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; தேனி கலெக்டர் எச்சரிக்கை

‘அரிக்கொம்பன்’ யானை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா எச்சரித்துள்ளார்.

Update: 2023-05-29 21:00 GMT

'அரிக்கொம்பன்' யானை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

24 மணி நேரமும் கண்காணிப்பு

கம்பம் நகருக்குள் புகுந்த 'அரிக்கொம்பன்' காட்டுயானை நேற்று முன்தினம் நாராயணத்தேவன்பட்டி வருவாய் கிராமத்தின் வழியாக கூத்தநாச்சியாறு காப்பு வனப்பகுதிக்கு சென்றுள்ளது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 5 நபர்கள் கொண்ட கால்நடை மருத்துவ குழு மற்றும் 3 கும்கி யானைகள் கம்பம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. யானையை கால்நடை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வனத்துறை மற்றும் யானை கண்காணிப்பாளர்கள் அடங்கிய 23 பேர் தொடர்ந்து 24 மணிநேரமும் வனப்பகுதிக்குள் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவு நீட்டிப்பு

'அரிக்கொம்பன்' யானையை பார்ப்பதற்காகவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் ஆர்வத்துடனும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் யானை இருக்கும் பகுதிக்கு வருகின்றனர். இதனால், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. எனவே, 'அரிக்கொம்பன்' யானை மீண்டும் ஊருக்குள் திரும்பி வராமல் தடுக்க கம்பம் நகரை தொடர்ந்து மற்றும் கம்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகள், காமயகவுண்டன்பட்டி, க.புதுப்பட்டி பேரூராட்சிகளிலும், கூடலூர் நகராட்சிக்கும் 144 தடை உத்தரவு நீட்டிப்பு செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

'அரிக்கொம்பன்' யானை பல இடங்களில் உலா வருவது போல் தவறான மற்றும் சம்பந்தமில்லாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

'அரிக்கொம்பன்' யானையை பிடிக்க அல்லது அடர் வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவு பெறும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வனத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்