சாகசம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பஸ் படிக்கட்டில் தொங்கி சாகசம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2023-09-01 17:20 GMT

கலந்துரையாடல் கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வதை தடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசியதாவது:-

காலை மற்றும் மாலை வேளையில் மாணவர்களின் நலனுக்காக கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும். படியில் தொங்கியபடியும், தரையில் கால்களை தேய்த்தவாறும் சாகசம் செய்து பயணிக்கும் மாணவர்கள் குறித்து பள்ளிக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பஸ்சில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தகராறு

தொடர்ந்து அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், படியில் தொங்கிய படி மாணவர்கள் பயணம் செய்யும்போது அதை கண்டக்டர்கள் கண்டித்தால் அவர்களை மாணவர்கள் தாக்கும் நிலை உள்ளது. பல இடங்களில் மாணவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் பயணிகளுக்கு தொல்லை ஏற்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது என்றனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

அதற்கு சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில், படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம். மாணவர்கள் யாராவது தகராறில் ஈடுபட்டால் உடனடியாக காவல்துறையை அழைக்கலாம். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள். ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகனங்களை ஓட்ட அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.

புதிய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) பொன்னுபாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்