எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2023-08-02 10:38 GMT

சென்னை,

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து, அனைவருடைய இதயங்களிலும் நீங்கா இடம்பெற்றிருப்பவர் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர். வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம், ராயபுரம் பகுதி, 51-ஆவது வட்டம், காளிங்கராயன் தெருவில் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எம்ஜிஆரின் திரு உருவ சிலையின் மீது நேற்று (1.8.2023) நள்ளிரவு, விஷமிகள் பெயிண்ட்டை ஊற்றி உள்ளனர். இச்செயல் மிகுந்த கண்டனத்துக்குரியதாகும். மேலும், இந்நிகழ்வு கோடான கோடி கழக தொண்டர்களின் மனதை வேதனை அடைய செய்துள்ளது.

மக்கள் அனைவராலும் போற்றி வணங்கப்பட்டு வரும் எம்ஜிஆர் சிலையின் மீது பெயிண்ட் ஊற்றிய கயவர்களை உடனடியாக கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் அமைப்பு செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை காப்பதிலும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தாமல், தனது குடும்பத்தை வளப்படுத்துவதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு வருவது நாடறிந்த உண்மை. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பில் உள்ள காவல் துறை, எம்ஜிஆர் சிலையின் மீது, பெயிண்ட் ஊற்றிய கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்