சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-08-02 20:09 GMT

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசின் கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில், சமூக விரோதிகள் அதிகரித்து வருவதோடு, சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் தமிழகம் மாறி இருப்பதை அவ்வப்போது அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் சுட்டிக் காட்டியுள்ளேன்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில், அவ்வப்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவது இருந்து வந்தாலும், அ.தி.மு.க. ஆட்சி காலங்களின் போது கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்றவை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்து சாராயம் கடத்தி வரப்படுவதும் முற்றிலும் தடுக்கப்பட்டது.

இந்த தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் கன ஜோராக நடந்து வருவது மட்டுமின்றி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்து உள்ளனர். அவர்கள் குடித்தது கள்ளச்சாராயமா? விஷச்சாராயமா? என்ற பட்டிமன்றத்தைத்தான் இந்த தி.மு.க. அரசு நடத்தியதே தவிர, சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசின் டாஸ்மாக் கடையில் மது குடித்தவர்கள் மரணம் அடைந்த அவலங்கள் நிகழ்ந்தபோது, அவர்கள் சயனைடு அருந்தி இறந்ததாக புதுக் கரடி ஒன்றை இந்த அரசு அவிழ்த்து விட்டது. ஏதோ கிராமப்புறங்களில் தான் பூமிக்குள் சாராயம் புதைக்கப்பட்டு இருக்கிறது என்றால், சென்னையில் காவல் துறை தலைமை அலுவலகம் (டி.ஜி.பி. அலுவலகம்) எதிரே, மெரினா கடற்கரையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலையின் அருகிலேயே சாராய ஊறல்கள் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததும், அவைகள் எதிர்பாராத விதமாக வெளியே எடுக்கப்பட்டதும், தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையின் உச்சமாகும்.

சேலம் மத்திய சிறையில், கைதிகள் சாராய ஊறல்களை தயாரித்து பூமியில் புதைத்து வைத்ததாகவும், அவைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தி.மு.க. ஆட்சியில், சிறைக்குள் கஞ்சா உள்பட போதை பொருட்களும், செல்போனும், சிம் கார்டுகளும் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சாராய ஊறல் தயாரிப்பு என்பது, தமிழகம் எந்த அளவுக்கு சீர்கெட்டு போயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

சிறைச்சாலை என்பது தவறு செய்தவர்களை திருத்துவதற்கான இடமே தவிர, மேலும் மேலும் அவர்கள் தவறுகளை செய்யத் தூண்டும் இடமாகவும், அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருப்பதும் சமூக அக்கறை கொண்ட யாராலும் ஏற்க முடியாது. மக்கள் மீது அக்கறை கொண்ட முதல்-அமைச்சராக இருந்திருந்தால் இதுபோன்ற சமூக விரோதச் செயல்கள் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் அறிந்து நடவடிக்கை எடுத்திருப்பார். சேலம் மத்திய சிறையில் நடந்தது போல், மற்ற சிறைகளிலும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீதும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்