ரசாயன பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ரசாயன பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு தயார் செய்யப்பட்ட பட்டாசு பொருட்களை உரிமமின்றி இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் கூடாது. விற்பனை செய்பவர்கள் அனுமதி பெற்ற இடத்தில், உரிமம் வழங்கப்பட்ட அளவுக்கு மட்டுமே வெடிபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
தடை செய்யப்பட்ட ரசாயன பட்டாசுகளை 'பசுமை பட்டாசுகள்" என தவறாக ஸ்டிக்கர் மற்றும் கியூஆர் குறியீடுடன் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தீயணைப்புத்துறை நிபந்தனைகளின்படி போதிய தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், பயன்படுத்தக்கூடிய நிலையில் தயாராக வைத்திருக்க வேண்டும். உரிமம் பெற்ற இடத்தின் அருகில் தீவிபத்து ஏற்படுத்தும் பொருட்கள் இருத்தல் கூடாது. கட்டாயம் புகைபிடிக்கக் கூடாது.
உடல்நலன் பாதிப்பு
மேலும் பண்டிகை கொண்டாட்டம் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பதால் முதியோர், குழந்தைகள், நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. மேலும், பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தின் மூலம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும்.
பட்டாசுகளில் பேரியம் உப்பு பயன்படுத்துவதும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடி பட்டாசுகளை உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த சரவெடிகளை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி, மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் கடந்த ஆண்டுகளைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். ஆகவே அரசின் உத்தரவுகளை கடைபிடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்.
மேற்கண்ட தகவல் கடலூா் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.