பதிவுச்சான்று இல்லாத தனியார் ரக விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை
பதிவுச்சான்று இல்லாத தனியார் ரக விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சமீபகாலங்களில் நெல், கம்பு, மக்காச்சோளம் ஆகிய தானிய வகைப்பயிர்களிலும், தர்பூசணி, சாம்பல் பூசணி, கிர்ணிப்பழம் ஆகிய காய்கறி, பழவகை பயிர்களிலும் தனியார் ரக விதைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் அனைத்து தனியார் ரக விதைகளும், சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்த பின்னரே விற்பனை செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட தனியார் ரக விதைகளில் களப்பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் பதிவுச்சான்று ரத்து செய்யவும், அந்த ரக விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து விதை விற்பனையாளர்களும் இதுபோன்ற தனியார் ரக விதைகளை கொள்முதல் செய்தால் அதற்கான பதிவுச்சான்று நகல் பெற வேண்டும். பதிவுச்சான்று நகல் இல்லாத விதைகளையோ அல்லது பதிவுச்சான்று ரத்து செய்யப்பட்ட ரக விதைகளையோ விற்பனை செய்தால் உரிய சட்டப்பிரிவுகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கொள்முதல் செய்யப்படும் அனைத்து விதைகளுக்கும் கொள்முதல் பட்டியல், உண்மைநிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், தனியார் ரக விதைகளுக்கான பதிவுச்சான்று ஆகிய ஆவணங்களைப்பெற்று இருப்புப்பதிவேட்டில் உரிய முறைப்படி இருப்பு வைத்து விற்பனைப்பட்டியல் உரிய படிவத்தில் விவசாயிகளின் கையொப்பம் பெற்று வழங்கி பராமரிக்கப்பட வேண்டும். விதைகளில் ஈரம் பாதிக்காத வகையில் விதை சேமிப்பு முறைகளை தவறாமல் கடைபிடித்து விதை விற்பனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.