வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை- அதிகாரி எச்சரிக்கை
வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்
பேரையூர்,
மதுரை மாவட்டம் சாப்டூர் வனத்துறை அதிகாரி கூறியதாவது:- பேரையூர் தாலுகாவில் சாப்டூர் வனப்பகுதி சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பல்வேறு விலங்குகள் வசித்து வருகிறது. பேரையூர், திருமங்கலம் தாலுகாவில் உள்ள ஒரு சில பகுதிகள் சாப்டூர் வனப்பகுதி கட்டுப்பாட்டில் வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் அடர்ந்த புதர்களில் முயல், காட்டுப்பன்றிகள், மயில்கள், மான்கள், பறவை இனங்கள் வசித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை ஒரு சில சமூக விரோதிகள் சட்ட விரோதமாக வேட்டையாடுவதாக தெரிய வருகிறது. இதுகுறித்து வழக்குகள் பதியப்பட்டு உள்ளது.வனவிலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றங்களை புரிந்தால் வனத்துறை சட்டப்படி கடுமையான அபராதம் மற்றும் வழக்குகள் பதியப்படும். மேலும் காட்டு பன்றிகளுக்காக ஒரு சில விவசாயிகள் தங்கள் நிலங்களில் மின் வேலி அமைத்து வருகிறார்கள். அதுவும் வனத்துறை சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார்.