பன்றிகளை அப்புறப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை
விருத்தாசலத்தில் பன்றிகளை அப்புறப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை என்று உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.;
விருத்தாசலம்:
விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருத்தாசலத்தில் வளர்க்கப்படும் பன்றிகள். பிரதான சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், பொதுசுகாதாரத்திற்கும் தீங்கு ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுத்தி பொது இடத்தில் தூய்மையினையும், நீரோட்டத்தையும் கெடுப்பதுடன் நோய் பரவுவதற்கும் காரணமாக உள்ளது. நகராட்சி எல்லைக்குள் பன்றிகளை சுற்றித்திரிய விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் அதன் உரிமையாளர்களே தங்களது சொந்த பொறுப்பில் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி மூலம் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தப்படும்.
விருத்தாசலம் நகராட்சி எல்லைக்குள் பன்றி வளப்பவர்கள் உடனடியாக பன்றிகளை நகரத்தில் இருந்து அகற்றாவிட்டால் பன்றியின் உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் படி தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்காக ஏற்படும் செலவினத்தை பன்றியின் உரிமையாளர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.