குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-15 21:29 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் 17 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் இனிப்பு பாக்ஸ் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 110 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரும்பாலும் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிய போலீசாருக்கு கண்காணிப்பு கேமரா உதவியாக உள்ளது. நாகர்கோவில் மாநகரில் புதிதாக 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. பஸ் நிலையங்களில் அதிகளவில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிக ஒலி எழுப்பும் சைலன்சர், ஏர்ஹாரன் வாகனங்களில் பயன்படுத்தினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

கடும் நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக ஓரிரு புகார்கள் வருகின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலை வாய்ப்பு வழங்குவதாக போலியான நிறுவனங்களை நம்பி மக்கள் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்