உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-11-10 18:45 GMT

கூடலூர்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

விவசாயிகளுடன் ஆலோசனை

கூடலூர் பகுதியில் கோடைகால பயிர்களை நடவு செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் கூட்டுறவு துறையின் கீழ் போதிய மற்றும் தேவையான உரங்கள் விற்கப்படுவதில்லை. இதை பயன்படுத்தி வெளி மார்க்கெட்டுகளில் பொட்டாசியம், யூரியா, பாஸ்பேட், டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வேளாண் தர கட்டுப்பாட்டு அலுவலர் அமிர்தலிங்கம் நேற்று கூடலூர் வந்தார். பின்னர் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயிகள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். மேலும் உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு, என்.சி.எம்.எஸ். மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைப்பதில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

உரிமம் பெற நடவடிக்கை

இருப்பினும் தொடர்ந்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் வேளாண் தர கட்டுப்பாட்டு அலுவலர் அமிர்தலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு தேவையான யூரியா உள்ளிட்ட நேரடி உரங்கள் என்.சி.எம்.எஸ். என்ற கூட்டுறவு கடைகளில் இருப்பு இல்லை. அதற்கு பதிலாக கலவை உரங்கள் மட்டுமே விற்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு துறையுடன் இணைந்துள்ள கம்பெனிகளும் தேவையான உரங்களை வழங்குவதில்லை. இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேபோல் வெளிமார்க்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடலூர் பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்