உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை கலெக்டர் லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார

Update: 2022-08-27 18:05 GMT

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை கலெக்டர் லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து நேற்று

மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் உரக்கடையில் கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைக்கவும், நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுத்தல், உரக்கடத்தல், உரம் பதுக்கல் மற்றும் உரத்துடன் இணை பொருட்கள் சேர்த்து விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட அளவில் வேளாண்துறை அலுவலர்களை கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தாலோ, உரங்களுடன் வேறு இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு பறக்கும் படை அமைத்து 5 வட்டாரங்களில் உள்ள 64 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 118 தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் 5 மொத்த உர விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினாா்.

ஆய்வின்போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சிவவீரபாண்டியன், மயிலாடுதுறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்