காலாவதியான விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை
காலாவதியான விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பண்ருட்டி,
திட்டப்பணிகளை ஆய்வு
பண்ருட்டி வட்டார பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது அவர் பண்ருட்டி வட்டார மகளிர் வாழ்வாதார சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலரிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து 32 முந்திரி உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து பணிக்கன்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டார். பின்னர் அதன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர் பாலசுப்பிரமணியம், உற்பத்தி தொடக்கம், நிறுவனத்தின் முத்திரை மற்றும் பேக்கிங் செய்யும் முறைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அகர்பத்தி தயாரித்தல்
மேலும் பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமத்திற்கு உட்பட்ட 14 பால் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு திட்ட விளக்க நிதியாக தலா ரூ.75 ஆயிரம் வீதம் வழங்கினார். இதையடுத்து அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சியில் உள்ள 20 பழங்குடியினர்களை கொண்டு அமைக்கப்பட்ட அகர்பத்தி தயாரித்தல் சமுதாய திறன் பள்ளிக்கான மூலப்பொருட்களையும், சேமக்கோட்டை ஊராட்சியில் மண்பாண்டம் தயாரிக்கும் சமுதாயத் திறன் பள்ளிக்கு பொம்மை தயாரித்தல் அச்சுகளையும் வழங்கினார்.
மேலும் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தின் மூலம் 15 பெண்களுக்கு நுன் குறு சிறு நிறுவன சான்றுகளையும் வழங்கினார். பின்னர் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எச்சரிக்கை
தொடர்ந்து அரசு விதை உரிமம் பெற்ற, தனியார் விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்த கலெக்டர், விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
மேலும் கடைகளில் காலாவதியான விதைகள் விற்றாலோ அல்லது உரிமம் பெறாமல் விற்பனை செய்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களை எச்சரித்தார். அப்போது அவருடன் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.