குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊட்டியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2023-06-21 21:45 GMT

ஊட்டி

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊட்டியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அப்துல் காதர் அறிவுறுத்தலின்படி ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான லிங்கம் பேசும்போது கூறியதாவது:-

14 வயது வரை உள்ள குழந்தைகளை பொருள் ஈட்டும் நோக்கத்துடன் வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றம் ஆகும். அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் உரிமை பெற்றோர்களுக்கு இல்லை. இந்த வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் வருங்காலம் வெற்றிகரமாக இருக்க நல்ல கல்வியை வழங்குவதே நோக்கமாக இருக்க வேண்டும். இதுபோன்று குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை பார்த்தாலோ, தெரிந்து கொண்டாலோ அதை பற்றிய தகவலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கலாம்.

கடும் நடவடிக்கை

குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் பொது இடங்களில் இருப்பதை பார்த்தாலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி தெரிவிக்கலாம். அதேபோல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. முகாமில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் துணை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் குணசேகரன், குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஷோபனா மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்