"கிராம நிர்வாக அலுவலரை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை": கலெக்டர்

“கிராம நிர்வாக அலுவலரை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை” எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-25 18:45 GMT

"கிராம நிர்வாக அலுவலரை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

கலெக்டர் ஆறுதல்

கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். லூர்து பிரான்சிஸ் உடலை பார்வையிட்டு, அருகில் கதறி அழுது கொண்டிருந்த அவருடைய மனைவி, மகனுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேர்மையான அதிகாரி

முறப்பநாட்டில் துயரமான சம்பவம் நடந்துள்ளது. லூர்து பிரான்சிஸ் மிக நேர்மையான அதிகாரி. அவர் ஆதிச்சநல்லூர் பகுதியில் பணியாற்றியபோது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்டு நேர்மையாக செயல்பட்டு உள்ளார். தற்போது கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக முறப்பநாடு வருவாய் கிராமத்தில் பணிபுரிந்து வந்த அவர் நேர்மையான அலுவலராக தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். அவரிடம் எந்த பொறுப்பு கொடுத்தாலும் திறம்பட செய்வார்.

கடும் நடவடிக்கை

நீதிமன்றத்திற்கு சென்று தனது பணிகளை முடித்த பின்பு, தொடர்ந்து அலுவலகத்தில் தனது பணியை செய்து கொண்டிருந்தபோது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். இந்த கொலை தொடர்பாக போலீசாரின் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முறப்பநாடு போலீஸ் நிலையம், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, லூர்து பிரான்சிஸ் உறவினர்கள் மற்றும் சக வருவாய் அலுவலர்களிடமும் விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்