பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-07-18 16:59 GMT

குடியாத்தம்

விழிப்புணர்வு ஊர்வலம்

குடியாத்தம் போக்குவரத்து காவல்துறை, தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு, குடியாத்தம் இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் சங்கம் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நடந்தது.

துணை போலீஸ் சூப்பிரண்டு கே.ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வி.சம்பத், சங்க சட்ட ஆலோசகர் எம்.வி.ஜெகதீசன், வேலூர் மாவட்ட செயலாளர் சு.ரமேஷ், குடியாத்தம் நகர தலைவர் எஸ்.ரமேஷ், நகர செயலாளர் ஜெ.சத்தியராஜ், பொருளாளர் என்.பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் வரவேற்றார்.

போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன் கலந்து கொண்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து குடியாத்தம் டிஜிட்டல் டெலிவரி சார்பில் வழங்கப்பட்ட 50 ஹெல்மெட்டுகளை நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரிமா சங்கம் சார்பாக ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மிளிரும் பாதுகாப்பு கவச உடைகளை போலீஸ் சூப்பிரண்டிடம் சங்க தலைவர் கமலஹாசன், செயலாளர் முருகதாஸ், வட்டார தலைவர்கள் வக்கீல்குமார், பொன்னம்பலம் ஆகியோர் வழங்கினார்கள்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாகன சோதனை

வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்படுகிறது.

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதலாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். வாகன சோதனையின் போது விபத்துகளை தடுக்க மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தினால் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் வாகனங்கள் தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கடும் நடவடிக்கை

பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரி விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கனரக வாகனங்கள் அப்பகுதியில் செல்ல தடை செய்வது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி விடும் நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளையும், குற்ற வழக்குகள் சம்பந்தமான பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரவு ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும். புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். புகார்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.ராமமூர்த்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்