சிகரெட் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் சிகரெட் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2023-09-05 17:45 GMT

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் சிகரெட் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக அவர் பஸ்நிலைய வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டார்.

அப்போது ஆங்காங்கே கிடந்த குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படியும், பஸ்நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கும்படியும் அறிவுறுத்தினார்.

புதிய பஸ்நிலையத்தில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் சுமார் 10 அடி தூரம் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து உணவுப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தன. அதைக்கண்ட கலெக்டர் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தும்படி கூறினார்.

ஓட்டல்கள், கடைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பொருட்களை வைக்க வேண்டும். பயணிகள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

சிகரெட் விற்றால் நடவடிக்கை

அப்போது ஒரு டீக்கடையில் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்யும்படி அரசு அலுவலர்களிடம் கலெக்டர் கூறினார். மேலும் பஸ் நிலையத்தில் சிகரெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இதையடுத்து அந்த கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 சிகரெட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கட்டண கழிப்பறையில் உடைந்து காணப்பட்ட கதவை சரி செய்யவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரம் வழங்கவும் கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது அரசு விரைவு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மற்றும் வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள் தங்களுக்கு அறை ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு கலெக்டர் பஸ்நிலையத்தில் கட்டப்பட்டு வரும் அறைகளில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. ஓரிருநாளில் அறை ஒதுக்கப்பட்டு சாவி வழங்கப்படும் என்றார்.

ஆய்வின்போது வேலூர் மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) முருகன், தாசில்தார் செந்தில், வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக துணை மேலாளர் பொன்னுபாண்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்