சேலம் மாநகரில் பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை

சேலம் மாநகரில் பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-11-23 21:09 GMT

சேலம், 

ரூ.6½லட்சம் அபராதம்

இதுதொடர்பாக சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாநகரில் விபத்துகளை தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரில் இந்தாண்டு இதுவரை போக்குவரத்து விதிகளை மீறிய நபர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 44 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் ரூ.21 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை விபத்தில் 183 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.

எனவே விபத்துகளை குறைப்பதற்காக மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரில் கடந்த 5 ஆண்டுகளில் அதிக விபத்துகள் நடைபெற்ற 75 இடங்களை கண்டறிந்துள்ளோம். இந்த இடங்களில் ஓரிரு நாட்களில் திடீரென அனைத்து போலீசாருடன் இணைந்து சோதனை நடத்த உள்ளோம். அப்போது போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு புதிய அபராத தொகை வசூலிக்கப்படும்.

பள்ளி மாணவர்கள்

குறிப்பாக இந்த சோதனையின் போது அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்களுடைய ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்படும். 18 வயது நிரம்பாத பள்ளி மாணவர்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு பெற்றோர் கொடுக்க கூடாது. மீறி கொடுத்து வாகன சோதனையின் போது சிக்கினால் மாணவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இன்றும் (நேற்று), நாளையும் (இன்றும்) 2 நாட்கள் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்