ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைபோலீஸ் டி.ஜி.பி. வன்னியபெருமாள் எச்சரிக்கை

Update: 2023-09-15 19:45 GMT

கிருஷ்ணகிரி

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. வன்னிய பெருமாள் எச்சரித்துள்ளார்.

டி.ஜி.பி. ஆய்வு

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் டி.ஜி.பி. கே.வன்னிய பெருமாள் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் சென்னை சாலை பாரிஸ் நகரில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் ரேஷன் அரிசி கடத்தலை முழு அளவில் தடுக்க போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது டி.ஜி.பி. வன்னியபெருமாள் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருந்து கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க வேண்டும். மேலும் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் மூலம் பக்கத்து மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.

தடுப்பு காவல்

சோதனைச்சாவடிகள் இல்லாத சாலைகளிலும் வாகன சோதனை செய்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு கைப்பற்றப்பட்டு கிருஷ்ணகிரி அலகில் தற்போது 325 வாகனங்கள் உள்ளன. அவற்றை மாவட்ட வருவாய் அலுவலருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டிட வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, சேலம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர், மணிகண்டன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்