வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு அரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை..!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 11, 12 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-10 06:07 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 9 ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், 10ஆம் தேதி அநேக இடங்களிலும், 11, 12, 13ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக் கூடும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழகம், புதுச்சேரி கடற்கரை நோக்கி வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நவம்பர் 14ஆம் தேதி வரை கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் 13ம் தேதி வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தற்போது மேலும் தீவிரம் அடைய தொடங்கியுள்ளதால், தென்மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிமீ உயரம் வரை நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி, நேற்று காற்றழுத்தமாக மாறியது. அது மன்னார் வளைகுடா பகுதி மற்றும் வட இலங்கை பகுதியை நெருங்கி வந்தது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வந்து வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இது தவிர இலங்கை அருகே ஒரு காற்று சுழற்சி, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி, அந்தமான் பகுதியில் இருந்து ஒரு காற்று சுழற்சி என 3 காற்று சுழற்சிகள் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வருவதால், மன்னார் வளைகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இந்த 3 காற்று சுழற்சியும் இன்று இணையும். அதனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.

இதனால், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். மேலும், இன்று நள்ளிரவு முதல் வடதமிழகத்திலும் மழை பெய்யும். 11ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை கனமழை இருக்கும். இது தவிர கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, பகுதிகளிலும் 11, 12, 13ம் தேதிகள் வரை கனமழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்