சேலத்தில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

சேலத்தில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.

Update: 2022-06-24 22:08 GMT

சேலம், 

மாநகராட்சி கூட்டம்

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

மாநகராட்சி பகுதியில் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் சிரமப்பட்டு வீடு கட்டுகின்றனர். ஆனால் மின் இணைப்பு பெற ஒரு குறிப்பிட்ட சதுர அடியில் வீடு கட்டியிருக்க வேண்டும், கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் புதிய வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெரு நாய்கள் தொல்லை

மாநகராட்சி பகுதி முழுவதும் தற்போது தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் மாநகர் பகுதியில் தற்போது 40 ஆயிரம் தெரு நாய் குட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பெருகி வரும் ெதரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் முன்பு அந்த பகுதியில் சாலைகள் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணி முடிந்ததும் அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் ஒரு சில பள்ளிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதை தடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களை வேறு வார்டுகளுக்கு மாற்றும் நடைமுறையை கைவிட வேண்டும். மாநகராட்சியை விரிவுபடுத்தும் போது ஊராட்சி பகுதிகளில் இருந்து 8 வார்டுகள் இணைக்கப்பட்டன. அந்த 8 வார்டுகளும் தற்போது மண் சாலைகள் தான் உள்ளன. எனவே அவற்றை தார்சாலையாக மாற்ற வேண்டும்.

பழுதான மின்கம்பங்கள்

ஒவ்வொரு வார்டுகளுக்கும், குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க வேண்டும். சேலம் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி போன்றை அருகருகே அமைந்துள்ளன. எனவே இந்த பகுதிகளில் கடைகள் வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு, கலெக்டர் அலுவலக சதுக்கம் அல்லது மாநகராட்சி சதுக்கம் என பெயர் வைத்து இந்த பகுதியை அழகுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையடுத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கூறினர். தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் சேகரிப்பு தொட்டி, பழுதான மின்கம்பங்கள் சாலைகள் சீர் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்