ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நீரோடைகள் வறண்டன

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நீரோடைகள் வறண்டன

Update: 2023-07-01 20:45 GMT

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை உள்ளிடட வனவிலங்குகளும், அரிய வகை பறவை மற்றும் தாவர இனங்கள் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீரோடைகளில் ஆண்டுதோறும் நீர்வரத்து இருக்கும்.

இந்த ஆண்டு கடந்த மாதம் 1-ந்தேதி பெய்ய தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. இதன் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் தடுப்பணைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் தண்ணீர் பாய்ந்து சென்ற தடுப்பணைகள் பாறைகளாக காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக யானைகள் கூட்டம், கூட்டமாக தாகம் தீர்க்க ஆழியாறு அணைக்கு படையெடுத்து வருகின்றன.

மேலும் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகங்களில் டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்படுகிறது. மேலும் வனக்குட்டை உருவாக்கி ஆழ்துளை கிணறு மூலமும் சோலார் பொருத்தி தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பரம்பிக்குளம், ஆழியாறு, சோலையாறு உள்ளிட்ட பி.ஏ.பி. அணைகளிலும் நாளுக்கு நாள் நீர்வரத்து குறைந்து வருகிறது. ஜூலை மாதம் தொடக்கத்தில் கடல் போல் காட்சி அளிக்கும் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் குட்டை போன்று காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடைசியில் பி.ஏ.பி. அணைகளில் 10.7 டி.எம்.சி. நீர் இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு 1.9 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட 8.8. டி.எம்.சி. நீர் பற்றாக்குறையாக உள்ளதால் குடிநீர், பாசனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்