புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்
மோக்கா புயல் உருவானதை குறிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.;
சென்னை,
அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்நிலை உருவானது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.
இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் இன்று இரவு தீவிர புயலாகவும், நாளை மிகத்தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும்14ம் தேதி காலை வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.