'பெரும்புயலைத் தடுக்க முடியாது; அதன் பாதிப்புகளை குறைக்கலாம்' - அன்புமணி ராமதாஸ்
மத்திய அரசு முதற்கட்டமாக வெள்ள பாதிப்பிற்கு 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் நிவாரணத் தொகையாக ரூ.20,000 வழங்க வேண்டும் என்றும், இடிந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசு உடனடியாக முதற்கட்டமாக இந்த கடுமையான வெள்ள பாதிப்பிற்கு 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இனி வரும் காலங்களில் கடும் வறட்சி, கனமழை, பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், பெரும்புயலைத் தடுக்க முடியாது என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம் என்றும் தெரிவித்தார்.