புறம்போக்கு இடத்தில் கொட்டகை கட்டும் பணி தடுத்து நிறுத்தம்
நாட்டறம்பள்ளி அருகே புறம்போக்கு இடத்தில் கொட்டகை கட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.
ஜோலார்பேட்டை ஒன்றியம் அக்ராகரம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நாட்டறம்பள்ளியை அடுத்த பனந்தோப்பை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 44), கூலி தொழிலாளி. இவர் நேற்று பனந்தோப்பு பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சிமெண்டு சீட் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்வதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து நாட்டறம்பள்ளி வருவாய் அலுவலர் வனிதா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என்பது உறுதியானது. பின்னர் வருவாய் துறையினர் சிமெண்டு கொட்டகை அமைக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தினர்.