கோத்தகிரி நேரு பூங்காவில் நிறுத்தப்பட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணி மீண்டும் தொடங்கியது

கோத்தகிரி நேரு பூங்காவில் நிறுத்தப்பட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணி மீண்டும் தொடங்கியது.;

Update: 2022-10-08 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி நேரு பூங்காவில் நிறுத்தப்பட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணி மீண்டும் தொடங்கியது.

நேரு பூங்கா

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள் ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.

இந்தப் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் காய்கறி கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துச் சென்றனர். இந்தநிலையில் கோடை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூங்காவை மேம்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்காக 15-வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

பணிகள் நிறுத்தம்

இதன்படி பூங்காவை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைத்தல், பூங்கா நுழைவு வாயிலில் டிக்கெட் கவுண்டர் மற்றும் கடைகள் அமைத்தல், பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அழகிய நீரூற்று அமைத்தல், சிறுவர் விளையாட்டு பூங்காவில் குழந்தைகளுக்கான கூடுதல் விளையாட்டு உபகரணங்களை அமைத்தல், பூங்கா கழிப்பிடத்தை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யபட்டு கடந்த மார்ச் மாதம் பணிகள் தொடங்கின. ஆனால் பூங்காவின் மையப் பகுதியில் 2020- 21-ம் ஆண்டிற்கான 15-வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி மட்டுமே காய்கறி கண்காட்சிக்கு சில தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. ஆனால் பாதுகாப்புச் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் அருகே டிக்கெட் கவுண்டர் கட்டும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக பூங்காவிற்குள் காட்டெருமைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் நுழைந்து புல்தரைகள், மலர்செடிகளை நாசம் செய்து வந்ததால். பூங்கா பராமரிப்பு பணிகள் தடைபட்டு, பூங்கா பொலிவிழந்து காணப்பட்டது.

மீண்டும் தொடங்கியது

எனவே பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சுற்றுப் புற சுவர் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா கோத்தகிரி நேரு பூங்கா மற்றும் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பூங்கா பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன் மேற்பார்வையில், பூங்கா சுற்றுப்புற பாதுகாப்புசுவர் கட்டும் பணி மற்றும் நுழைவு வாயில் அருகே டிக்கெட் கவுண்டர் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்