2 கோவில்களில் நிறுத்தப்பட்ட அன்னதான திட்டம் மீண்டும் தொடக்கம்

2 கோவில்களில் நிறுத்தப்பட்ட அன்னதான திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.

Update: 2022-10-29 19:39 GMT

அன்னதான திட்டம் நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 8 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதில் பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலிலும், வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூரில் உள்ள விருத்தாசலேஸ்வரர் கோவிலிலும் தினமும் தலா 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் போதிய நிதி இல்லாமல் கடந்த சில மாதங்களாக, இந்த கோவில்களில் அன்னதான திட்டம் நிறுத்தப்பட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் நேற்று 'தினத்தந்தி' நாளிதழில் 'மக்கள் மேடை' என்ற பகுதியில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவு அளிக்கிறதா? என்பது பற்றி பக்தர்களின் கருத்துகளுடன் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதில், நிறுத்தப்பட்ட 2 கோவில்களில் மீண்டும் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கை தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மீண்டும் தொடக்கம்

இந்த செய்தியை கண்ட தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களில் நிறுத்தப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் திட்டத்தை நேற்று மீண்டும் தொடங்கி வைத்தார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், இனி 2 கோவில்களிலும் தினமும் மதியம் தலா 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்களில் நடைபெறும் அன்னதான திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த திட்டத்திற்கு நன்கொடையாளர்கள், உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். மேலும் பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா கொண்டாடுபவர்களும் கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கலாம், என்றார்.

2 கோவில்களிலும் மீண்டும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதால், அன்னதானத்தை பக்தர்கள், ஆதரவற்றவர்கள், யாகசம் பெறுபவர்கள் வயிறாற சாப்பிட்டு சென்றனர்.

25 பேரின் பசியை போக்கும்

இதுகுறித்து பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பெரம்பலூர் தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி சிங்காரம் கூறுகையில், கொரோனாவிற்கு பிறகு இந்த கோவிலிலும், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலிலும் போதிய நிதி இல்லாததால் அன்னதான திட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே இந்த கோவிலில் தினமும் மதியம் என்னை போன்று அன்னதானம் சாப்பிட்டு வந்தவர்கள், மதிய உணவுக்கு திண்டாடி வந்தனர். தற்போது கோவிலில் மீண்டும் தொடங்கப்பட்ட அன்னதானம் வழங்கும் திட்டம், தினமும் 25 பேரின் பசியை போக்கும். இதற்கு நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.

அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் நன்றி

பெரம்பலூர் வள்ளலார் தெருவை சேர்ந்த அம்மாகண்ணு கூறுகையில், பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் தினமும் அன்னதானம் சாப்பிட்டு வந்தேன். ஆனால் கடந்த சில மாதங்களாக அன்னதானம் வழங்கப்படாதது பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினருக்கும் கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் அன்னதான திட்டம் மீண்டும் தொடங்கப்படவில்லை. தற்போது பக்தர்களின் கோரிக்கையாக 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் கோவிலில் மீண்டும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர். இதற்காக அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி' நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்