முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-05-14 20:43 GMT

ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணி காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தண்ணீரில் மூழ்கிய மாணவர்கள்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் சோதனைச்சாவடி அருகில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை(மாணவர்கள்) தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் 1,903 கனஅடி தண்ணீர் முற்றிலும் நேற்று காலை 11.30 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கொள்ளிட கதவணையின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

தண்ணீரில் மூழ்கிய சிறுவர்கள் கிடைக்கப்பெறும் வரை கொள்ளிட கதவணையின் மதகுகள் முற்றிலும் அடைக்கப்படும். காவிரி ஆற்றில் வரும் தற்போதைய 1,903 கனஅடி நீர் வரத்தினை சுமார் 8 மணி நேரம் வரை மட்டுமே முக்கொம்பு மேலணையில் தேக்கி வைக்க இயலும். மேலணை முழு கொள்ளளவை எட்டியவுடன் மேலணைக்கு வரும் 1,903 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும். இதற்கு இடையில் தண்ணீரில் மூழ்கியவர்கள் கிடைக்கப்பெற்றவுடன் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்