திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு சரக்கு சேவை நிறுத்தம்
திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு சரக்கு (கார்கோ) சேவையை நிறுத்திக்கொள்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
திருச்சி
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை, திருச்சி,மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவை அளித்து வருகிறது. தினசரி சென்னைக்கு 3 சேவையும், திருச்சிக்கு 3 சேவையும், மதுரைக்கு ஒரு சேவையும் அளித்துவந்தது.
இந்த நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு காரணமாக சென்னைக்கு 2 விமான சேவையும், திருச்சிக்கு ஒரு விமான சேவையும், மதுரைக்கு வாரத்துக்கு 3 சேவையும் என குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு கார்கோ சேவையை நேற்று (ஜூலை 1 முதல்) நிறுத்திக்கொள்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 10 டன் பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நியச் செலாவணி பாதிக்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.