ஆக்கிரமிப்பை அகற்றி வீட்டுமனை வழங்க கல்நடப்பட்டது
நெமிலி அருகே ஆக்கிரமிப்பை அகற்றி வீட்டுமனை வழங்க கல்நடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளுர் கிராமத்தில் வீடற்ற 21 ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை பள்ளுர் குறவர் காலனியை சார்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துவந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது அந்த நபர் இந்த இடத்தை விட்டு செல்லுங்கள், இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் வருவாய் ஆய்வாளர் பிள்ளையார் தலைமையில் ஆக்கிரமிப்பை அகற்றி பயனாளிகளுக்கு வீட்டுமனை அளவீடு செய்து கல்நடும் பணி நடைபெற்றது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நெமிலி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 21 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.