கல் குவாரி விபத்து வழக்கு - அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -மதுரை ஐகோர்ட்டு கேள்வி
கல்குவாரி விபத்து குறித்து அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கல்குவாரி விபத்து குறித்து அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
குவாரி விபத்து
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன்.காந்திமதிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வந்தது.
இந்த கல்குவாரியில் சட்டத்திற்கு புறம்பாக இரவும், பகலும் வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு எம்.சாண்ட் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் பலர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அந்த குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 4 பேர் பாறைகளின் இடுக்குகளுக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்பு அந்த குவாரி உரிமையாளர் கைதானார். குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.
அதிகாரிகளின் அலட்சியம்
அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குவாரியை முறையாக அதிகாரிகள் கண்காணிக்காத பட்சத்தில் கனிமவள உதவி இயக்குனர், அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அந்த அரசாணையின் பேரில் அடை மிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து சம்பந்தமாக உரிய அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே எங்கள் மனுவின் அடிப்படையில் குவாரி விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
விபத்துகள் தவிர்க்கப்படும்
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, கல் குவாரி விபத்துக்கு காரணமான உரிமையாளர் கைதாகி உள்ளார். ஆனால் இந்த விபத்து குறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் எதிர்காலங்களில் இது போன்ற விபத்துகள் தவிர்க்கப்படும். எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வாதாடினார்.
பின்னர் ஆஜரான அரசு பிளீடர் திலக்குமார், இந்த விவகாரத்தில் கனிமவள அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
நீதிபதிகள் கேள்வி
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து, தமிழ்நாடு தொழில் துறை செயலாளர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனர், நெல்லை மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஏப்ரல் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.