வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு; மர்ம நபர் தப்பி ஓட்டம்

அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

Update: 2023-05-07 19:10 GMT

அரக்கோணம்,

சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காலையில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு புறப்பட்டு செல்லும் இந்த ரெயில் பிற்பகல் அங்கிருந்து புறப்பட்டு மாலையில் சென்னையை வந்தடைகிறது.

நவீன கட்டமைப்புடன் பயணிகள் விரும்பி பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரெயில்கள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் மீது விஷமிகள் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மைசூருவுக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சென்றபோது மர்மநபர் கல்வீசிவிட்டு தப்பினார். இந்த சம்பவத்தில் அந்த பெட்டியின் கண்ணாடி உடைந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை கைது செய்தனர்.

கண்ணாடி உடைந்தது

இந்த நிலையில் மைசூருவில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை அரக்கோணத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி - அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியுள்ளனர்.

இதில் சி-6 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. நல்ல வேளையாக அந்த பெட்டியில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்வீசிவிட்டு தப்பிய நபர்களை தேடி வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது ரெயில்வே பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்