தடுக்க சென்ற போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு; 26 பேர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே தம்பதியை கொடூரமாக தாக்கியவர்களை தடுக்க சென்ற போலீஸ் வாகனம் மீதும் கல் வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-03-12 18:45 GMT

குறிஞ்சிப்பாடி, 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம்(வயது 45). விவசாயி. இவரது மனைவி ராணி(37). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது, தம்பிப்பேட்டை காலனியை சேர்ந்த கலிவழகன் மகன் விஜயசேகர் (28), குமார் மகன் ஹரிஹரன் (21), சக்கரவர்த்தி மகன் சுரேந்தர் (24) தனஞ்செயன் மகன் மாயகிருஷ்ணன் (28) மற்றும் பள்ளி மாணவர்கள் உருட்டு கட்டைகளுடன் அங்கு வந்தனர்.

தம்பதி மீது தாக்குதல்

அப்போது அவர்கள், ராணியிடம் உங்கள் ஊரை சேர்ந்த தேவநாதன் மகன் தன்வந்திரி குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் எங்கள் பகுதியை சோந்த மாணவர்களை திட்டி உள்ளார். எனவே இப்போது திட்டி பாருங்கள் என்று ராணியிடம் கேட்டு தகராறு செய்தனர்.

இதை கவனித்த சிவானந்தம், சம்பந்தமே இல்லாத எங்களிடம் ஏன், வீண் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விஜயசேகர் தரப்பினர் சிவானந்தத்தையும், ராணியையும் கொடூரமாக தாக்கினர்.

மேலும் அவர்கள் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

போலீஸ் வாகன கண்ணாடி உடைப்பு

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார், தங்களது வாகனத்தில் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அவர்கள் போலீஸ் வாகனம் மீதும் கல்வீசி உள்ளனர். இதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சிவானந்தம், ராணி ஆகிய இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

26 பேர் மீது வழக்கு

இது குறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயசேகர், ஹரிஹரன், சுரேந்தர், மாயகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் போலீஸ் வாகனம் மீது கல்வீசிய சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் தம்பிப்பேட்டை காலனியை சேர்ந்த செந்தமிழ்செல்வன், வீரபிரபு உள்பட 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்