வீடுகள் மீது கல்வீச்சு; வாகனங்கள் உடைப்பு

வத்திராயிருப்பு அருகே வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதுடன், வாகனங்களும் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.;

Update:2023-08-05 01:56 IST

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதுடன், வாகனங்களும் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

தகராறு

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகே உள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 34) இவர் கூமாபட்டி ஊருணி தெருவில் நண்பர்கள் சிலருடன் மதுகுடித்து விட்டு தகராறு செய்து கொண்டிருந்ததாகவும், இதனை அப்பகுதியை சேர்ந்த கோட்டைமலை என்பவர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் அவரை தாக்குவதற்காக அவரின் வயலுக்கு சென்றார். ஆனால் அங்கு கோட்டைமலை இல்லை. அவருடைய உறவினர் குமார் என்பவர் இருந்தார். அவரை ஆனந்தராஜூடன் வந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குமார், கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் மீண்டும் குமார் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் அவரை அங்கிருந்து செல்லும்படி தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ஆனந்தராஜ் தடுமாறி அங்கிருந்த வாருகாலில் விழுந்து காயமடைந்தார். பின்னர் அவர் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

வீடுகள் மீது கற்கள் வீச்சு

பின்னர் அவர் தனது நண்பர்கள், உறவினர்கள் 20 பேரை திரட்டிக்கொண்டு குமார் மற்றும் கோட்டைமலை ஆகியோர் வசிக்கும் பகுதிக்கு கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீடுகளின் மீது கற்களை வீசினர். இருசக்கர வாகனங்களையும் உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் அங்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட தரப்பினர் போலீசாரிடம் முறையிட்டனர்.

போலீசார் குவிப்பு

வீடு மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட தரப்பினர் கூமாபட்டி காளியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து கோட்டைமலை கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் மீதும், ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீதும், பாதிக்கப்பட்ட தரப்பு மக்கள் அளித்த புகாரின் பேரில் 22 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கூமாபட்டி, நெடுங்குளம், ராமசாமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்