13 அடி உயர பிரமாண்டம்; 1000 ஆண்டுகளுக்கு முந்தைய நெடுங்கல்-ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-05-01 18:45 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய நெடுங்கல் 13 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இதனை ஆய்வு செய்து, உண்மையான வரலாற்றை தெரியபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

நெடுங்கல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா சீராப்பள்ளி பேரூராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட காந்தி நகரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய நெடுங்கல் ஒன்று உள்ளது. இந்த நெடுங்கல் 13 அடி உயரம், 5 அடி சுற்றளவுடன் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இதை நாட்டுக்கல் என்றும் அந்த பகுதியில் உளளவர்கள் கூறுகின்றனர்.

இந்த நெடுங்கல் விவசாயம் செய்து வந்த நிலத்தில் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. தற்போது அந்த நிலத்தின் உரிமையாளர் நெடுங்கல் உள்ள இடம் தவிர மற்ற நிலத்தை வீட்டு மனைகளாக விற்பனை செய்ததால் தற்போது நூற்றுக்கணக்கான வீடுகள் கொண்ட அருந்ததியர் காலனியாக, அந்த பகுதி இருந்து வருகிறது.

30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நெடுங்கல்லை இளைஞர்கள் பார்த்துவிட்டு, புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்-பில் அனுப்பி வருகின்றனர். சிலர் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். இந்த நெடுங்கல் பற்றி ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்தால், இக்கால இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த நெடுங்கல் பற்றி உள்ளூர் இளைஞர்களுக்கே தெரியாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

வழிபாடு நடத்துகிறோம்

இந்த நெடுங்கல் குறித்து அதன் அருகில் வசித்து வரும் விவசாய தொழிலாளி நல்லுசாமி கூறியதாவது:-

விவசாயி ஒருவர் எங்களுக்கு வீடு கட்ட நிலம் விற்றார். அப்போது அவர் எங்களிடம் நெடுங்கல்லில் பில்லி, சூனியம் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதை நம்பாதே. ஏனெனில் அது கடவுள். அதை வழிபட்டு வந்தால் உன் குடும்பம் வளரும் என்றார். அதன்படி எனது மனைவி பாப்புவும், நானும் அந்த நெடுங்கல்லில் கருப்புசாமி இருப்பதாக கருதி அமாவாசை மற்றும் முக்கிய நாட்களில் தண்ணீரால் கழுவி, மாலை அணிவித்து, விளக்கு வைத்து வழிபட்டு வருகிறோம். இதனால் நாங்களும் வளர்ந்து உள்ளோம். மற்றவர்கள் வழிபடுவதில்லை.

பில்லி, சூனியம் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. இந்த நெடுங்கல் பற்றிய வரலாறு தெரியவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருவதாக கூறுகின்றனர். முன்பு ஒரு காலத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியினர் திருமண காலங்களில் இந்த நெடுங்கல் அருகே சடங்குகள் செய்து வந்ததாக கூறுகின்றனர். ஆனால் சமீப காலமாக அதுபோன்று எந்த நிகழச்சியும் நடைபெறவில்லை. நானும், எனது மனைவியும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 அடி உயரத்தில் அந்த நெடுங்கல்லை சுற்றிலும் சிமெண்டால் பீடம் கட்டி பாதுகாத்து வருகிறோம். இந்த நெடுங்கல் இருப்பதை பற்றி தகவல் அறிந்த சிலர் வந்து பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் திரும்பி செல்கின்றனர். உலகில் எதை, எதையோ பெரிதாக பேசுகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நெடுங்கல் பற்றி தெரியாமல் இருந்து வருவது வியப்பாக உள்ளது. இந்த நெடுங்கல் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்போது தான் இந்த நெடுங்கல் பற்றிய உண்மையான வரலாறு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிறத்தில் மாற்றம் இல்லை

அந்த பகுதியை சேர்ந்த சிவில் என்ஜினீயரிங் மாணவர் தனுஷ் (19) கூறியதாவது:-

இந்த நெடுங்கல் பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. இங்கு வசிக்கும் முதியவர்களிடம் கேட்டால் கூட அவர்களுக்கும் விவரம் தெரியவில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த நெடுங்கல்லின் சிறப்பு என்னவென்றால் 1000 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் அதன் நிறத்திலோ, உருவத்திலோ எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருப்பது ஆகும். அப்போது இருந்து, இப்போது வரை செங்கல் நிறத்தில் இருப்பது அதன் தனி சிறப்பாகும்.

1000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரே கல்லால் 13 அடி உயரத்தில் நெடுங்கல்லை உருவாக்கி இருப்பதை பார்க்கும்போது அந்த கால தமிழர்களின் அறிவையும், தனி சிறப்பையும் உணர முடிகிறது. இதற்காக அந்த காலத்து தமிழர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. ராசிபுரத்துக்கு இந்த நெடுங்கல் தனி சிறப்பை சேர்த்துள்ளது என்றே கூறலாம். இந்த நெடுங்கல் பற்றி நிறைய பேருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த நெடுங்கல்லை விட சிறியதாக இருக்கும் கற்களை பற்றி இணையதளங்களில் காண முடிகிறது. எனவே இந்த நெடுங்கல்லின் சிறப்புகளை இக்கால இளைஞர்கள், மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆய்வு செய்து வெளியிட வேண்டும். இந்த நெடுங்கல் அமைந்திருப்பதன் மூலம் எங்கள் ஊர் பெருமை அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்