ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

தஞ்சையில் திருட்டுப்போன ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் வாலிபரை கைது செய்தனர்.

Update: 2023-05-09 20:44 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் திருட்டுப்போன ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் வாலிபரை கைது செய்தனர்.

திருட்டு

தஞ்சை மாநகரம், வல்லம், ஒரத்தநாடு பகுதிகளில் கடைகள், வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை குறி வைத்து சிலர் திருடி சென்றனர். இது குறித்து அதன் உரிமையாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பலை கைது செய்வதுடன், அந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

பிடிபட்ட வாலிபர்

இந்த தனிப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன பகுதிகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் குறைந்த விலையில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்வது குறித்தும் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை வாலிபரிடம் குறைந்த விலைக்கு ஒருவர் விற்க முயன்றபோது போலீசாரிடம் பிடிபட்டார்.பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது, அவர், தஞ்சை பூக்கார முதல்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அரவிந்த் (வயது30) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்தபோது, தஞ்சை பகுதியில் மோட்டார் சைக்கிள்களை மட்டும் 4 பேர் சேர்ந்து திருடுவதாகவும், அதில் உள்ள பதிவு எண்களை மாற்றி, குறைந்த விலைக்கு தஞ்சை பகுதியிலேயே விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்.அதன்படி குறைந்த விலைக்கு விற்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 மோட்டார் சைக்கிள்களை போலீசார் நேற்று பறிமுதல் செய்ததுடன் அரவிந்தை கைது செய்தனர். மேலும், இந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்