சாமி சிலையை நடுரோட்டில் வைத்து மறியல்

சாமி சிலையை நடுரோட்டில் வைத்து மறியல்

Update: 2022-06-13 20:03 GMT

பாபநாசம்:

கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சாமி சிலையை நடுரோட்டில் வைத்து மறியல் நடைபெற்றது. இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில் திருவிழா

பாபநாசம் தாலுகா ராஜகிரி அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் சாமி வீதிஉலா முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. அப்போது ராஜகிரி மெயின் ரோட்டில் வந்து போது, இருதரப்பினரிடையே பல்லக்கு தூக்குவதில் தகராறு ஏற்பட்டது. இதனால் நடுரோட்டில் சாமியை இறக்கி வைத்துவிட்டு இரு தரப்பினரும் கற்களாலும், மூங்கிலாலும் தாக்கி கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாலைமறியல்

தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் சாமிசிலையை வைத்து சாலைமறியல் நடந்தது. தகவல் அறிந்ததும் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், கோவில் செயல் அலுவலர் ஹரீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், ராஜகிரி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சாமி சிலையானது சாலையிலிருந்து எடுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. இதனால் அந்தபகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்