சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம்

நாகையில் சாலைேயாரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-24 16:07 GMT

நாகையில் சாலைேயாரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்மிக சுற்றுலா தலம்

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகியவை அமைந்துள்ளது. மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளது. இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நாகை நகர் குடியிருப்பு பகுதியில் ஒரு சில இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்து செல்கின்றனர்.

தேங்கி கிடக்கும் குப்பைகள்

நாகை வெளிப்பாளையம் காரியாங்குடி செட்டி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் மையப்பகுதியில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாததால் அதிக அளவில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. ஒரு சில இடங்களில் தொட்டிகள் நிறைந்து குப்பைகள் கீழே கொட்டி கிடக்கின்றன. இந்த குப்பைகளில் உள்ள கழிவுகளை தின்பதற்கு வரும் ஆடு, மாடு, நாய்கள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

துர்நாற்றம்

நாகை ஆயுதப்படை மைதானம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நாகையில் சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்