தூத்துக்குடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-01 18:45 GMT

தூத்துக்குடி:

மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

பகுதி சபா கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடந்தது. மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட போல்பேட்டை பகுதி சபா கூட்டம் கீதா ஓட்டல் அருகே நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் பேசும் போது, நந்தகோபாலபுரம் பகுதியில் கால்வாய் அருகே உள்ள குழியை மூட வேண்டும். பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்ட பகுதிகளில் சிலர் தன்னிச்சையாக கால்வாயை உடைத்து இணைப்பு கொடுக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும். போல்பேட்டை கிழக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாய் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். அந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போல்பேட்டை கிழக்கு பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினர்.

ஒத்துழைப்பு

கூட்டத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி பேசும் போது, ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அந்த பகுதியில் உள்ள குறைகளை எங்கள் கவனத்திற்கு கொண்டு வருவார்கள். அதை அதிகாரிகளோடு இணைந்து குறைகளை தீர்த்து வைப்போம். தூத்துக்குடி மாநகராட்சியை தமிழகத்தில் முன்னோடி மாநகராட்சியாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னுரிமை

அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி நகராட்சி, மாநகராட்சி பகுதியில் மக்களின் கருத்தை கேட்டு அதன்படி திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பலருக்கு இடம் இருந்தும் குடியிருப்பு வசதியில்லாமல் இருந்தால், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டுவதற்கு வழி வகை செய்யப்படும். இடம் இல்லாதவர்கள் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். மாநகர பகுதியில் சுயஉதவி குழுக்களுக்கான மானியம் குறைபாடுகள் குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்கலாம். தெருவிளக்கு, சாலை, குடிநீர், சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் பகுதி சபா குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், தங்கம்மாள், ஐசக், அருணகிரி, கணேஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் அசோக், நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்