அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த நடவடிக்கை
கிராமிய கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் கூறினார்.;
கிராமிய கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் கூறினார்.
கலைச்சங்கமம்
விருதுநகரில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பாக கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 45 கிராமிய கலைஞர்களுக்கு சீருடை அணிகலன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இயல்,இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் பேசியதாவது:- தமிழகத்தில் கிராமிய கலைஞர்களுக்காக முதல்-அமைச்சர் ரூ.3 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் கிராமிய கலைகளுக்கு உதவித்தொகை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாகவும், சீருடை அணிகலன்கள் வாங்க ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தி தரப்படுகிறது.
அடையாள அட்டை
நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி தனது வேலைப்பளுவின் இடையில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விரும்பினார்.
அந்த வழியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் கிராமிய கலைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் 6 லட்சம் கிராமிய கலைஞர்கள் உள்ளனர். இதில் 50 ஆயிரம் பேர் மட்டுமே அடையாள அட்டை பெற்றுள்ளனர். ஏனெனில் அடையாள அட்டை வாங்கும் நடைமுறை சிரமமாக உள்ள நிலையில் தற்போது இந்த நடைமுறையை எளிதாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனை பயன்படுத்தி இந்த ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 3 லட்சம் கிராமிய கலைஞர்களாவது அடையாள அட்டை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன், கிராமிய கலைஞர் வளர்ச்சி வாரிய இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம், விருதுநகர் நகர சபை துணை தலைவர் தனலட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.